Wednesday 12 September 2012

விமர்சனம்


இப்போ நான் எழுதபோற பட விமர்சனம், நீங்க ஏற்கனவே பார்த்த படமா கூட இருக்கலாம். ஆனா, நான் கடைசியா பார்த்த படம் இது தான். அதனால இதையே விமர்சனம் பண்றேன் -


படத்துல வர்ற கேரக்டர்கள் -

நாயகன் - நம்மாளு, பெண்களை - 'சூப்பர் பிகர்', 'சுமார் பிகர்' மற்றும் 'அட்டு பிகர்' என நேர்த்தியாக பாகுபடுத்தும் வேலையை நண்பர்களோடு சேர்ந்து செய்கிறார். அவர் கண்களில் படித்து கொண்டிருக்கும் நாயகி பட, விடாமல் அவர் போகும் இடமெல்லாம் சென்று பாட்டு பாடி மனசை கரைக்கிறார்.

நாயகனின் நண்பன் - இவரை காதலுக்கு உதவுவதற்காகவே, அவர் வீட்டில் 'நேர்ந்து' விட்டிருக்கிறார்கள். எத்தனை அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும், கூச்சமில்லாமல் த்யாக உள்ளதோடு உதவி செய்கிறார், பின்னால் நின்று டான்ஸ் ஆடுகிறார், கடைசியில் வில்லனிடம் செம அடி வாங்குகிறார்.

நாயகி - இவர் கொஞ்சம் லூசு ! இவரோட பேர் மட்டுமில்ல, முகம் கூட சில வினாடிகளே வர்றதால மனசுல நிக்கல..ஆனா அதிக முறை காட்டப்படர இன்ன பிற விஷயங்கள் பற்றி இந்த ப்ளாக் ல பேசமுடியாது! (நம்ம கம்பெனி கொஞ்சம் டீசன்ட்டு). எப்டியோ காதல் வருது..

பெற்றோர்கள் - நாயகனின் பெற்றோர்கள் ரொம்ப நல்லவங்க. எப்டினா, படத்துல அப்பா பையனோட சேர்ந்து சரக்கடிப்பார். அம்மா சைடு டிஷ் கொண்டுவருவாங்க. முக்கியமா, 'அந்த பொண்ண என்ன ஆனாலும் கைவிட்டுடாத!' ன்னு சொல்லி அவனுக்கும் ஒரு லட்சியத்த(?) உருவாக்கறாங்க.

பெண்ணோட பெற்றோர் -இவர்கள் கெட்டவங்க. பொண்ணு தான் விரும்பிட்டாளேன்னு நினைக்காம, நிலையான வேலையில்லாத, நித்தம் சரக்கடிச்சு மட்டையாகும் ஒரு துடப்பக்கட்.. யை விரும்புவதா என்று அர்த்தமில்லாமல் கோவப்படுகிறார்கள். பணக்கார திமிர்தான், வேற என்ன?

வில்லன்- இவன் மார்கெட்டுக்கு வர்ற நாயகனோட தங்கைய கைய பிடிச்சு இழுக்கறான்.. இதே தானே ஆரம்ப காட்சில நாயகனும், நாயகிய பண்ணினான்னு கேட்காதீங்க. நாயகிக்கு அண்ணன் இல்ல. இந்த பொண்ணுக்கு இருக்கு. கடைசியில இந்த வில்லன் ஒரு அரசியல்வாதியோட தம்பி.. (சாரி, ஒரு ரவுடியோட மச்சான். சரி. ரெண்டுல எதோ ஒண்ணு )

சண்டை காட்சிகள் ஏராளம். ஆனால், பாவம் நம்ம ஹீரோ commerce group எடுத்து படித்ததால், நியூட்டன் பற்றி தெரிந்திருக்கவில்லை. புவியீர்ப்பு விசை, வீசம் என்ன விலை என்று கேட்கிறார். இருந்த இடத்திலிருந்து அப்படியே உயர பறந்து, பத்து பேரையாவது அடித்து விட்டு கிழே இறங்குகிறார்..வில்லனின் ஆட்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் பழக்கத்தை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

பாடல்கள் : வசனம் அல்ல பாடல்கள் தான் என்று அவர்கள் ஆட தொடங்கும் போது புரிகின்றது. நாயகி, கொளுத்தும் சென்னை வெய்யிலில் ஜீன்சும், பனி மலைகளில் அரைகுறை ஆடையும் அணிகிறார்! (அதான் லூசுன்னு சொல்லியாச்சே?) இது தவிர ஒரு சோக பாடல் இருக்கின்றது - முதல் முறை கேட்கும் போது, நான் நாயகனுக்கு வயிற்று வலி தான் என நினைத்துவிட்டேன், ரொம்ம்ம்ம்ம்பவே முக்கி முக்கி பாடுகிறார்.




படத்தின் கதையை யாரோ ஒரு ட்விட்டர் தான் எழுதியிருக்க வேண்டும்.. 2 வரிகளுக்குள் வருமாறு யோசித்திருக்கிறார்.

காதலின் மகத்துவத்தையும், பணம் இல்லாமல் கூட இருக்கலாம் - குணம் இருந்தால் போதும்ன்னு கடைசி சீன்ல எல்லாரும் புரிஞ்சுக்கறாங்க. (குணத்த வச்சு கத்திரிக்கா வாங்கறதா ஒரு காட்சி வச்சிருக்கலாம் - இது என்னோட ஆதங்கம்). உபரியா, ஜாதி-மதம்-ஊழல் எல்லாம் ஒழியும் போது தான் நம்ம நாடு (தமிழ் சினிமாவும்) உருப்படும்னு ஒருமாதிரியா புரிஞ்சுக்கறோம்...

ஆங்!! படத்தோட பேரு விட்டுட்டேனே ? யோசிச்சு பார்த்தேன்.. ஒரே குழப்பம். நிறைய பட பேர் ஞாபகத்துக்கு வருது.. ப்ளீஸ், நீங்களாவது சரியான டைட்டில் கண்டு பிடிச்சு எழுதுங்களேன்.



நன்றி:

விக்னா@யமுனா(டிவிட்டர்)

No comments:

Post a Comment