Wednesday 12 September 2012

இந்தியா


த்ரிஷா, கட்ரினா, ஐஸ்வர்யா - யாருடையது பெஸ்ட்??

அன்பான விளம்பரதாரர்களுக்கு,

ஒரு அப்பாவி குடும்ப தலைவி எழுதிக்கொள்வது..உங்கள் விளம்பரங்கள் அனைத்தும் தினமும் பார்க்கிறேன் (பார்க்க வைக்கிறீர்கள்). இவற்றை அப்படியே நம்ப வேண்டுமென்று தான் நினைக்கிறேன். ஆனால், என்னை சுற்றியுள்ளவர்கள் தான் நம்பவிடாமல் சதி செய்கிறார்கள்.

சில விளம்பரங்களும், அவை என்னை படுத்தும் பாடும் கேளுங்கள் :

முதலில் AXE DEODORANT விளம்பரங்கள்- இவை சொல்லவருவது என்னவென்றால், DEODORANT ஐ உடல் முழுவதும், நகராட்சியில் கொசு மருந்து அடிப்பது போல அடித்து கொண்டீர்கள் என்றால், அழகழகான சைஸ் ஜீரோ பெண்கள் நாலா திசையிலிருந்தும்(சமயத்தில் கூரையை பிய்த்து கொண்டும்) உங்களை தேடி வருவார்கள். சுமார் நூத்தி முப்பது ரூவாய் ஐம்பது பைசாவில் முடிந்து விடக்கூடிய சுலபமான வழி இது..!! இதை நம்பாமல் என் நண்பன் தன் ஒரே ஒரு காதலியின் மனதை கரைக்க, மாங்கு மாங்கென்று கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்..(ஒரே சமயத்தில் வரும் இத்தனை பெண்களையும் சமாளிப்பது எப்படி என்று டப்பியில் சின்ன எழுத்தில் போட்டிருப்பார்களா தெரியவில்லை..)


ஒரு லிக்விட் சோப்பு விளம்பரம். ஒரே ஒரு ஸ்பூன் சோப்பு கொண்டு ஒரு அம்மணி தன் புடவை துளி கூட கசங்காமல் கூடை பாத்திரத்தை தேய்க்கிறார். நானும் அது போல தந்தால், என் வீட்டில் வேலை செய்பவர்,
"ஐய..தம்மாத்தூண்டு தந்தா, அயுக்கு எப்டி போவும்??நா தா போய்டுவன், உ வேலயே வேனாமினு!!!.." என்று பயம் காட்டுகிறார்.

இதே கதை தான் துணிகளுக்கும்..'கறை நல்லது' சோப்பு கம்பெனிக்கு தான். அது போல துணிய ரெண்டு நாள் துவைக்க போட்டீங்கன்னா, அடுத்த ஜென்மத்துல கூட உங்களுக்கு வேலைக்கு ஆள் கிடைக்காதுங்கறது உறுதி.


இது கொஞ்சம் வேற மாதிரி - விஜய் டிவியில் தினமும் பதினோரு மணி வாக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகள் கருப்பு கண்ணாடி அணிந்து வந்து, கூடுவாஞ்சேரி அருகில் உள்ள பிளாட், சென்னை தான் என்று சொல்லி கூவி கூவி விற்கிறார்கள்.(அதோ தெரியுது பாருங்க ரயில்வே ஸ்டேஷன், NH 45, அந்த நிலா --இது எல்லாமே இந்த பிளாட்லேருந்து நடக்கற தூரம் தான்!) இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு இது புரிந்தால் தானே?? தாம்பரம் தாண்டினாலே சொத்தில் ஒரு பங்கு கேட்கிறார்கள்..ஒரு நாள், 'நீயா? நானா?'வில் இவர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது என் ரொம்ப நாள் ஆசை.அதையும் நிறைவேற்றிவிட்டார்கள்.



சாப்பாட்டுக்கு வருவோம் - என் வீட்டு டிவியை எப்போது உயிர்பித்தாலும் வரும் போகோ/சுட்டி டிவி/ஆதித்யா சானல்களில் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வந்து, நூடுல்ஸ், சாக்கலேட், பிஸ்கட், சிப்ஸ் வகையறாக்களில் வைட்டமின் A முதல் Z  வரை இருப்பதாக விளம்பரங்கள் கற்பூரம் ஏற்றாமல் சத்தியம் செய்கின்றன..ஆஹா, இதை நம்பினால் தான் எவ்வளவு சவுகர்யம்??? ஆனால் ஸ்கூல் திறந்தவுடன் டைரி என்று ஒன்றை கொடுத்து, மேற்படி வகையறாக்களை "junk food" என பெயரிட்டு இவற்றை கொண்டுவர கூடாதென்று அச்சடித்து தருகிறார்கள்..

சோப்பு மற்றும் இன்னபிற அழகு சாமான்கள் :

இருபது வயது மதிக்க தக்க நடிகைகள், 2 நாள் முன் மார்கெட்டுக்கு வந்த சோப்பே தன் அழகுக்கு காரணம் என்று கட்டியம் கூறுகிறார்கள்.
சரி இவர்கள் சொல்படி நடப்போம் என்றால், எனக்கு த்ரிஷாவையும், என் கணவருக்கு கட்ரினாவையும், மகளுக்கு ஐஸ்வர்யாவையும், மாமியாருக்கு பயத்தமாவையும் பிடித்திருக்கிறது..
நாங்கள் எதை வாங்குவதென்று முடிவு கட்டுவதற்க்குள், ஒன்று அந்த நடிகை தன் அழகுக்கான காரணத்தை வேறு சோப்பு அல்லது கிரீம் என்று மாற்றிக்கொள்கிறார். அல்லது சோப்பு தனக்கு வேறு அழகியை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது..


இது இப்படியென்றால், "உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?" என்று ஒரு நடிகை தினமும் வந்து மிரட்டுகிறார். என் பேஸ்ட்டில் இருப்பது உப்பா, சர்க்கரையா...ன்னு நான் கண்டுபிடிப்பதற்குள், எதுக்காகவும் facebook பக்கமே வராத தோழி, நான் உபயோகிக்கும் டூத் பேஸ்ட்டில் இருப்பது 'நிகோடின்' என்று ஒரு செய்தியை போட்டு, பிடித்து கொண்டிருந்த கடைசி ஆணியையும் பிடுங்கிவிட்டு மாயமாகிறாள்..

ஸ்ஸ்ஸ்ஸ்....முடியலங்க!! விளம்பரம் என்றாலே பொய் தான் என உறுதியாக நம்பும் நேற்றைய தலைமுறைக்கும் , எல்லா விளம்பரங்களையும் கண்டு ஏமாறும் அடுத்த தலைமுறைக்கும் நடுவில் நாங்கள் திண்டாடுவது உங்களுக்கு தெரியுமா?

தெரிந்தால் மீள்வதற்கு வழியும் சொல்லுங்கள்.

இந்த தேசத்தின் எல்லா தங்கமணிகள் சார்பாகவும்,
ஒரு குடும்பத்தலைவி

பி.கு: பதிவோட தலைப்பு சும்மா போங்கு'க்காக.. எவ்ளோ தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினாலும் கம்பெனி பக்கம் யாரும் வர்றதில்ல..இப்டி தலைப்பு வச்சா வர்றாங்கலான்னு பார்த்தேன். இதோ நீங்க வந்துட்டீங்க.  :-)

No comments:

Post a Comment